வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் மூன்றாவது ஆண்டு விழா

நியூஜெர்சி வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் மூன்றாம் ஆண்டு நிறைவு ஆண்டு விழா, கடந்த ஞாயிறு, மே 6ம் தேதி வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நியூஜெர்சி, ப்ளைன்சுப்ரோ நகரில் உள்ள நடுநிலைப்பள்ளியில், நண்பகல் 2மணித் தொடங்கி இரவு 9மணி வரை விழா நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துக் கொண்டனர். 

நிகழ்ச்சி நண்பகல் 2மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. பள்ளியின் ஆசிரியர்கள் திருமதி.சமுத்திரா, திருமதி.ஹம்சா, திருமதி.லட்சுமி, திருமதி.கிருபா, திரு.சண்முகம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள். பள்ளி ஆசிரியர் திருமதி.லட்சுமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். 

வள்ளலார் பறையிசைக் குழுவின் பறையிசையுடன் பள்ளியின் கலை நிகழ்ச்சிகள் தொடங்கியது. முதன் முறையாக மேடை ஏறிய வள்ளலார் பறையிசைக் குழுவினர் மிகவும் சிறப்பாக நம் பாரம்பரிய இசையை இசைத்தனர். பறையிசையைப் பெற்றோர்கள் வெகுவாக ரசித்துப் பாராட்டினர். 















பறையிசையைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் தொடங்கின. வள்ளலார் தமிழ்ப் பள்ளி எப்பொழுதும் மாணவர்கள் பாடல்களைப் பாடுவதை அதிகம் ஊக்குவித்து வருகிறது. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் என்ற ஔவையாரின் பாடலுக்கு ஏற்பப் புலம் பெயர்ந்தச் சூழலில் வளரும் தமிழ்க் குழந்தைகளின் தமிழ் மொழி வளத்தை மேம்படுத்த, வள்ளலார் தமிழ்ப் பள்ளி பாடல்கள் பாடுவதை அதிகம் ஊக்குவிக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு விழாவிலும் அதிகப் பாடல்கள் பாடப்பட்டன. வள்ளலார், பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் பாடல்களைச் சார்ந்த நிகழ்ச்சியாக இந்த ஆண்டு விழா நடைபெற்றது. பாவேந்தர் பாரதிதாசனின் 127வது பிறந்ததினமாகவும் கொண்டாடப்பட்ட இந்த ஆண்டு விழாவில், பாவேந்தரின் பாடல்கள் அதிகம் பாடப்பட்டன. 

முதலில் மழலைப் பாடல்களை மழலை நிலை மாணவர்களும், அடிப்படை நிலை மாணவர்களும் பாடினர். மழலைச் செல்வங்களின் பாடல்கள் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகளை இனிமையாகத் தொடங்கி வைத்தது. இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களை உள்ளடக்கிய வள்ளலார் தமிழிசைக் குழுவின் தமிழிசை நிகழ்ச்சி நடந்தது. வள்ளலாரின் பாடல்களைத் தமிழிசைக் குழுவினர் பாடியது தேனினும் இனிமையாக அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்தது. அடுத்து வந்த கிராமிய நேரத்தில் மக்களிசைப் பாடல்களுக்கு மழலை மற்றும் அடிப்படை நிலை மாணவர்கள் சிறப்பாக நடனம் ஆடினர். 

பாவேந்தர் பாரதிதாசனின் 127வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் அடுத்த வந்த பாரதிதாசன் நேரத்தில் பாவேந்தரின் பாடல்கள் பள்ளிக் குழந்தைகளால் பாடப்பட்டன. பாவேந்தரின் பாடல்களுக்கு நடனமும் நடைபெற்றது. பாவேந்தரின் பிறந்த நாள் சிறப்புரையைச் சிறப்பு விருந்தினர் திருமதி.கனிமொழி வழங்கினார். பாவேந்திரின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்திய அவரது சிறப்புரை அனைவரது சிந்தனையையும் தூண்டுவதாக இருந்தது. அடுத்த வந்த பாரதி நேரத்தில், மகாகவி பாரதியின் பாடல்கள் பள்ளிக் குழந்தைகளால் பாடப்பட்டன. 

வள்ளலார் தமிழ்ப் பள்ளி நிறுவனரும், தலைமையாசிரியருமான திரு.சசிகுமார் ரெங்கநாதன் தலைமையுரையாற்றினார். வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் இந்த ஆண்டுச் சிறப்பம்சங்கள், தமிழிசை வரலாறு, மக்களிசை, வள்ளலார் தமிழ்ப் பள்ளியில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளின் நோக்கங்கள் ஆகியவற்றைப் பற்றித் தலைமையாசிரியரின் உரை அமைந்தது. 

இதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களின் பல்வேறு நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாட்டுப்புறப் பாடல்களை மையப்படுத்தி நடந்த இந்த நடன நிகழ்ச்சிகள் கிராமிய வாழ்வியலின் பல்வேறு பரிமாணங்களை அமெரிக்காவில் வளரும் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதாய் அமைந்தது. 

இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழில் இயலும், இசையும் மட்டுமே நடைபெற்றால் முத்தமிழைச் சுவைக்க முடியுமா ? நாடகமும் அடுத்து நடைபெற்றது. அமெரிக்க வாழ்க்கைச் சூழலை மையப்படுத்திய நாடகங்களைப் பள்ளி மாணவர்கள் வழங்கினர். இயல், இசை, நாடகம் எனப் பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக முடிவடைந்தது. 

வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் மேடை பெற்றோர்களையும் தங்கள் திறமையை அரங்கேற்ற ஊக்குவிக்கிறது. அடுத்த வந்த மக்களிசை நேரம் பெற்றோர்கள் தங்கள் திறமைகளை மேடையேற்றும் களமாக அமைந்தது. மக்களிசை நேரத்தில், முதலில் பள்ளி மாணவர்கள், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தாலும், எங்களாலும் தமிழக நாட்டுப்புறப்பாடல்களைப் பாட முடியும் என நாட்டுப்புறப்பாடல்களைப் பாடினர். அடுத்து ஆசிரியர்கள், பெற்றோர்களை உள்ளடக்கிய “வள்ளலார் மக்களிசைக் குழுவினர்” வழங்கிய வில்லுப்பாட்டு நிகழ்ச்சி அனைவரையும் மகிழ்வித்தது. அதனைத் தொடர்ந்து, மூத்த ஆசிரியர் திரு.பாண்டியராசன் தலைமையில் பள்ளி ஆசிரியர்கள் நாட்டுப்புறப்பாடல்களைப் பாடினர். 

வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் உதவித் தலைமையாசிரியர் திருமதி.இந்து, பள்ளி ஆண்டறிக்கையை வாசித்தார். பள்ளியின் பொருளாளர் திருமதி.பொற்செல்வி பள்ளியின் நிதி நிலை அறிக்கையினை வாசித்தார். லாபநோக்கற்ற வள்ளலார் தமிழ்ப் பள்ளி தன்னுடைய நிதி நிலையை வெளிப்படையாக ஒவ்வ்வொரு ஆண்டும் வெளியிடும் என்று திருமதி.பொற்செல்வி பேசினார். 

இதனைத் தொடர்ந்து வந்த வரலாற்று நேரத்தில் ராசராச சோழன் குறித்த சிறப்புரையைப் பள்ளி ஆசிரியர் திருமதி.நித்யா வழங்கினார். காவிரியும், சிலப்பதிகாரமும் என்ற தலைப்பில் பள்ளி ஆசிரியர்கள் திருமதி.சமுத்திரா, திருமதி.ஹம்சா, திருமதி.லட்சுமி, திருமதி.கிருபா சிலப்பதிகாரப் பாடலை அழகாகப் பாடினார்கள். 

ஆண்டு விழாவிற்கு, சிறப்பு விருந்தினர்களாக நியூஜெர்சி தமிழ்ச்சங்க நிர்வாகிகளும், நியூஜெர்சியில் உள்ள பிற தமிழ்ப் பள்ளிகளின் நிர்வாகிகளும் வருகை தந்திருந்தனர். நியூஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் மருத்துவர்.திரு.சுந்தரம், தற்போதைய தலைவர் திரு.கல்யாண், துணைத்தலைவர் திரு.செந்தில்நாதன், திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி முதல்வர் திருமதி.சாந்தி, குமாரசாமி தமிழ்ப் பள்ளி நிர்வாகிகள் திரு.கபிலன், திரு.ரவி, திரு.ராசாமணி, குருவாயூரப்பன் தமிழ்ப் பள்ளி முதல்வர் திரு.மோகன், இலங்கை தமிழ்ப் பள்ளிகள் நிர்வாகி திரு.சசி செல்லதுரை, தமிழ் ஜெர்சிப் பள்ளி நிர்வாகிகள் திரு.ராஜசேகர், திரு.மணிகண்டன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருந்தனர். 

வள்ளலார் தமிழ்ப் பள்ளி நிர்வாகி திருமதி.தமிழ்ச்செல்வி சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தி, வரவேற்றுப் பேசினார். 

இதனைத் தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியாக, பள்ளி உதவித்  தலைமையாசிரியர் திருமதி.சங்கீதா நன்றி கூற, சுவையான இரவு விருந்திற்குப் பிறகு விழா இனிதே நிறைவுற்றது. 


Comments

Popular posts from this blog

WASC Accreditation

English Public Speaking Course

"Open Book" Monthly Tests