நியூசெர்சி வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் நான்காவது ஆண்டு விழா

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என அனைத்து உயிர்களிடத்தும் அன்புச் செலுத்திய வள்ளலார் அவர்களின் பெயரில் நடக்கும் நியூசெர்சி வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் நான்காவது ஆண்டு விழா மிகவும் சிறப்பாக சூன் மாதம் 1ம் தேதி மேற்கு விண்ட்சர் நகரில் உள்ள தாமசு குரோவர் நடுநிலைப் பள்ளிக் கலையரங்கத்தில் நடைபெற்றது.முத்தமிழின் அரங்கேற்றம், இளமையின் கொண்டாட்டம் என இயலும், இசையும், நாடகமும் ஒன்றிணைய, மாணவர்கள் தங்கள் தமிழ்த் திறமையை வெளிப்படுத்தி தமிழ்ப் பண்பாட்டினைக் கொண்டாடினர்.

வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் நான்காவது ஆண்டு விழா, நண்பகல் 2:30மணி அளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. பள்ளி ஆசிரியர்கள் திருமதி.தீபா, திருமதி.மதி, திருமதி.பிரேமா ஆகியோர் நிகழ்ச்சிகளை அழகுறத் தொகுத்து வழங்கினர்.

பள்ளியின் நிர்வாகக் குழு துணைத் தலைவர் திரு.ரமேசு தியாகராசன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பள்ளியின் உதவித் தலைமையாசிரியர் திருமதி.பொற்செல்வி வேந்தன் பள்ளியின் ஆண்டு அறிக்கையினை வாசித்தார். இதனைத் தொடர்ந்து இயலும், இசையும், நாடகமும் வகுப்புவாரியாக மேடையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. அமெரிக்காவில் வளர்ந்தாலும் தங்களாலும் தமிழில் நிகழ்ச்சிகளை அழகாகக் கொடுக்க முடியும் என மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.


ஆண்டு விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக நாட்டிய நாடகங்களும், நாடகங்களும் அமைந்தன. தமிழர் நிலத்திணைகள் நாடகத்தில் மாணவர்கள் தமிழர்களின் ஐவகை நிலங்களையும் கண்ணுக்கு விருந்தாக்கினர். சிலப்பதிகாரத்தின் புகார் காண்டத்தில் இருந்து சில பாடல்களுக்கு நாட்டிய நாடகமாகச் சிலப்பதிகாரம் நாட்டிய நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து குற்றலாக் குறவஞ்சி நாட்டியம் எனத் தமிழ் இலக்கிய வளமையை மேடையில் மாணவர்கள் வெளிப்படுத்தினர்.

புலம்பெயர் நாடுகளில் செயல்படும் தமிழ்ப் பள்ளி நிகழ்ச்சிகளில் சிறப்பம்சமாக அமைவது நாடகங்களே. காரணம் அவை தான் மாணவர்கள் எந்தளவுக்கு தமிழில் பேசக்கூடியவர்களாக இருக்கின்றனர் என்பதை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளாக அமைகின்றன. அந்த வகையில் தெனாலிராமன் நாடகம், மின்னணுச் சாதனங்கள் நாடகம், தமிழகச் சுற்றுலா நாடகம் என வரிசையாக நாடகங்களை அரங்கேற்றி தாங்களும் அழகுத் தமிழில் பேச முடியும் என மாணவர்கள் நிருபித்தனர். தொடர்ந்து வள்ளலார் மற்றும் முத்துதாண்டவரின் பாடல்களுக்கு தமிழிசை நிகழ்ச்சி, ஒயிலாட்டம், கோலாட்டம், பறையிசை என வரிசையாக நிகழ்ச்சிகள் நடந்தேறின.


வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் நான்காவது ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக நியூசெர்சி தமிழ்ப் பள்ளி நிர்வாகிகளும், நியூசெர்சி தமிழ்ப் பேரவை நிர்வாகிகளும் வருகைத் தந்தனர். எடிசன் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி முதல்வர் திரு.சாந்தி தங்கராசு; தமிழ் செர்சிப் பள்ளி நிறுவனர் திரு.மணிகண்டன்; குமாரசாமி தமிழ்ப் பள்ளி நிர்வாக் குழு உறுப்பினர்கள் திரு.கபிலன், திரு.ராசாமணி, திரு.ரவி, திரு.சக்தி; குருவாயூரப்பன் தமிழ்ப் பள்ளி முதல்வர் திரு.மோகன்தாசு சங்கரன்; இலங்கை தமிழ்ப் பள்ளிகளின் நிர்வாகி திரு.சசி செல்லதுரை, நியூசெர்சி தமிழ்ப் பேரவை ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் திரு.செந்தில்நாதன் முத்துசாமி, திருமதி.அமுதா ஆறுமுகம்; சக தமிழ்ப் பள்ளிகளின் ஆசிரியர்கள் திரு.இராச இளங்கோவன், திரு.சுப்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்தனர். சிறப்பு விருந்தினர்களை தலைமையாசிரியர் திரு.சசிகுமார் ரெங்கநாதன், உதவித் தலைமையாசிரியர் திருமதி.பொற்செல்வி வேந்தன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் திரு.ரமேசு தியாகராசன், திரு.பாலாமுதன் சோனை, திரு.சிவசங்கரன் பொன்னையா ஆகியோர் வரவேற்று சிறப்பித்தனர்.

பள்ளி ஆசிரியர் திருமதி.நித்யா ரமேசு அனைவருக்கும் நன்றி கூறினார்.

இறுதி நிகழ்ச்சியாக பள்ளி ஆசிரியர்கள் பங்குபெற்ற நகைச்சுவைப் பட்டிமன்றம் நடந்தது. உள்ளங்கையில் உலகம் : புதையலே, புதைகுழியே என்ற தலைப்பில இன்றைய நவீன உலகம் சார்ந்த சுவையான நகைச்சுவைப் பட்டிமன்றம் நடந்தது. நியூசெர்சியின் புகழ்ப்பெற்ற நடுவரான திரு.மோகன் ராமன் நடுவராக இருந்து நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்.

சுவையான கலைநிகழ்ச்சிகளின் முடிவில் சுவையான தலைவாழையிலை விருந்து அனைவருக்கும் பறிமாறப்பட்டது. தமிழ்ப் பண்பாடு சார்ந்த கலைநிகழ்ச்சிகளின் முடிவே தமிழ்ப் பண்பாட்டின் முக்கிய அம்சமான விருந்தோம்பலை அமெரிக்காவில் வளரும் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் சிறப்பாக தலைவாழையிலை விருந்து நடந்தேறியது.
இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுடன் கூடவே தலைவாழையிலை விருந்து என வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் நான்காவது ஆண்டு விழா இனிதே நிறைவுற்றது.
Comments

Popular posts from this blog

புதிய கல்வியாண்டு : 2020-2021

Virtual Tamil Classes until December 2020